Sunday, 20 January 2013

கொங்கு வரலாற்றில் கன்ன குலம்

கொங்கு வரலாற்றில் கன்ன குலம் மூன்று நாடுகள் அதன் காணிகள் பதினெட்டு குல கோவில்கள் நான்கு பிரிவுகள் கோட்டை கொத்தளம் 34 தலைமுறை ராஜ்ய பரிபாலனம் என கொங்கு நாட்டின் மிக நீண்ட ஆட்சியை நடத்திய பெருமைமிகு கன்ன குலத்தின் பெரியோர் சிலரை பற்றிய பதிவு. கன்னிவாடி மும்முடி நல்லதம்பி மன்றாடியார் மதுக்கரை செல்லாண்டியம்மன் கோவிலானது அக்காலத்தில் மிக பிரசித்தம். கொங்கு மக்கள் அனைவரும் பொதுவாக வணங்கும் தெய்வமாகும். அண்ணன்மார் கதை மூலமும் அறியலாம். கோவில் விழா மூவேந்தர்களும் வந்திருந்து சிறப்பு செய்யும் வண்ணம் விமரிசையாக கொண்டாடப்படும். அப்படி ஒரு சிறப்புமிக்க விழா காலத்தில் கன்னிவாடி காணிக்குரிய கன்ன குல கந்தசாமி கவுண்டர் மகன் நல்லதம்பி கவுண்டரும் சென்றிருந்தார். விழாவின் போக்கில் இணக்கத்தோடு இருந்த மூவேந்தருக்கும் கோவிலின் மேல் உள்ள அதிகாரம் குறித்து எல்லை தகராறு ஏற்பட்டது. ஆனால் அதை தீர்த்து வைக்க துணிவோ, திறமையோ எவருக்கும் ஏற்படவில்லை. மூன்றில் ஒரு அரசனுக்கு பாதகமாக பேசிவிட்டாலும் தலை தப்பாது என்ற பயம். பஞ்சாயத்து செய்வதில் வல்லவரான நல்லதம்பி கவுண்டர் முன் வந்தார். மூவேந்தரையும் தீர்ப்புக்கு கட்டுப்படும் உறுதியை வாங்கிக்கொண்டு, வாதங்களையும் பிரதிவாதங்களையும் கேட்டறிந்தார். பின்னர் புதிய யோசனையாக மதுக்கரை செல்லாண்டியம்மன் கோவிலையே மையமாக வைத்து மூன்று கூறாக வேந்தர்களின் எல்லைகளை வகுத்து அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படியான தீர்ப்பை கூறினார். அக மகிழ்ந்து போன மூவேந்தர்களும் நல்லதம்பி கவுண்டரின் திறமையை கொண்டாடி அவருக்கு “மும்முடி மன்றாடியார்” என்னும் பட்டத்தோடு கன்னிவாடி ராஜ்ஜிய அதிகாரத்தையும் வழங்கினர். கொங்கு நாட்டு பட்டகாரர்களில் மூவேந்தர்களும் முடி சூட்டிய மும்முடி பட்டம் கன்ன குலத்திற்கே ஆகும். பின்னர் அவர் வழி வந்த ஆட்சியாளர்களுக்கும் மூவேந்தர்ரின் குலகுருக்கள் வந்து முடிசூட்டி வைப்பார்கள். இவ்வளவு பெருமை மிகு ராஜ்ஜியத்தை, கன்ன குல பெண்ணின் சவாலுக்காக கலப்பு மணத்தை எதிர்த்து ராஜ்ஜியம் துறந்து வெளியேறிய மாண்பும் இதே கன்ன குலத்திற்கு சேர்ந்தது. பின்னாளில் பல்லவர்கள் ஆட்சி தலைதூக்கிய காலத்தில் பள்ளியர் கை ஓங்கியது. அந்த சமயத்தில் ஒரு நாள் வன்னிய பெண்ணுக்கும் கன்ன குல பெண்ணிற்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில், வன்னியபெண் “உன்னை என் அண்ணனுக்கு கட்டி வைக்கிறேன” என்று சபதமிட, “எங்க வீட்டு நாயை உன் அண்ணனுக்கு கட்டி வைப்பேன்” என்று எதிர்சபதமிட்டார் கன்ன குல பெண். தன் குடிவண்ணான், நாவிதர், தோட்டி துணையோடு சபதத்தை நிறைவேற்றி கன்னிவாடியை துறந்து வெளியேறினர் கன்ன குலத்தார். அப்போது பின்தொடர்ந்த பல்லவ-வன்னிய படையை திசை திருப்ப பொற்காசுகளை சிதறி விட்டனர். அதை பொறுக்கி கொண்டு படை திசை மாறியது. அந்த இடமே இன்றைய பொன்பரப்பி. தங்கள் இன பெண்ணின் சபததிற்காகவும், குல மானதிற்காகவும்-பெரும் படையையும் எதிர்த்து செயல் முடித்து முடி துறந்த மாண்பை கொண்டாடியே தீர வேண்டும். சூர்ய காங்கேயன் கன்னிவாடியை விட்டு வெளியேறிய நல்லதம்பி மன்றாடியார் தலைமையிலான கன்ன குலத்தார் பல்வேறு காணிகளில் குடியமர்ந்தனர். அந்த பயண நாட்களின் ஒரு விடியற்காலை பொழுதில் நல்லதம்பி மன்றாடியார் மனைவிக்கு இளம் சூரியனை போல் ஆண் மகவு பிறந்தது. சூர்யகாங்கேயன் என்று பெயரிட்டனர். சூர்யகாங்கேயனின் அப்பிச்சிமார் (மோரூர்-தற்போதைய திருச்செங்கோடு) கீழக்கரை பூந்துறை நாட்டு ஆந்தை குலத்தோர். நல்லதம்பி மன்றாடியாரும் திருச்செங்கோடு பகுதியில் குடியமர்ந்தார். (இன்றும் கன்ன குலத்தாரின் குல கோவில்களை கவனித்தால் கன்னிவாடியில் இருந்து திருச்செங்கோடு வரை வரிசையாக பல கோவில்கள் இருக்கும்). வளர்ந்த சூர்யகாங்கேயன் தனது அப்பிச்சிமாரின் சபையில் சென்று தனக்கென ஒரு காணி வேண்டுமென கேட்டார். அவரின் உறவுகள் அனைவரும் பார்க்க சபைநடுவே “மூவேந்தர் சூட்டி கொடுத்த ராஜ்ஜியத்தையே தொலைத்த உங்களுக்கு காணி ஒரு கேடா..! பறைச்சேரி தான் உங்களுக்கு காணி..” என்று சுடு வார்த்தைகளால் ஏளனம் பேசினர். கூனி குறுகிப்போன சூர்யகாங்கேயன் ஆங்காரமும் ஆற்றாமையும் தூக்கத்தை தொலைக்க, அங்கிருக்க முடியாது, வீரபாண்டிய மன்னனின் படையில் சேர்ந்தார். என்ன செய்வது கேட்டாலும் மேன்மக்கள் மேன்மக்கள் அல்லவா..!. தனது வீரம் மற்றும் அறிவுதிறத்தால் வெகு விரைவில் தலைமை பொறுப்புக்கு இளம் வயதிலேயே வந்தார். அந்த சமயத்தில் பாண்டியனாலும் தோற்கடிக்க முடியாதவாரு வானாதிராயன் என்னும் வன்னிய மன்னன் (இன்றைய திருவண்ணாமலை) பகுதியில் கோட்டை கொத்தளத்தொடு விளங்கினான். மன்னன் தொடர் தோல்வியால் மனம் உடைந்து வெதும்பி போய் இருந்தார். இதை சவாலாக ஏற்று சிறிய படையோடு கொங்குச்சிங்கம் கிளம்பியது. ஏற்கனவே வன்னியரால் தங்கள் பூர்வீக நாட்டை இழந்த கோபத்தையும் இதில் காட்டினார். கோட்டையை நன்கு நோட்டம விட்டார். பின்னர் பண்டிகை நாளில் கோட்டையின் தளபதிகள் வெளியே வந்தபோது ஒரு குழு உட்புகுந்து கோட்டையையும் ஒரு குழு வெளியில் இருந்த வீரர்களையும் கொரில்லா போர் முறையால் அழித்து வானாதிராயனை உயிரோடு பிடித்து வந்து வீரபாண்டியன் முன் நிறுத்தினார். சேகுவேரா, சத்ரபதி சிவாஜி, தீரனார், மாசேதுங், ஹோசிமின் போன்றோருக்கு முன்னரே சூர்யகாங்கேயன் கொரில்லா யுத்த முறையை கச்சிதமாக பயன்படுத்தியது நினைவில் வைக்க வேண்டியது. வெற்றி மகிழ்ச்சி மனதை நிறைத்து விழியை நிரப்ப, பாண்டிய மன்னன சூர்யகாங்கேயனின் வீரத்துக்கும் அறிவுக்கும் ரசிகனானான். “என்ன வேண்டுமோ, கேள் சூர்யகாங்கேயா” என கேட்க, தன் உள்ளத்தில் எரிந்து கொண்டிருந்த நெருப்பை கொட்டினார். பாண்டிய மன்னனும் ‘இம்முடி காங்கேய மன்றாடி’ என்று பெயரிட்டு மோரூர் நாட்டின் பட்டத்தை சூர்யகாங்கேயனுக்கு அளித்தான். மோரூர் சபையில் கூனி குறுகி வெளியேறியவர் அதே சபைக்கு அரசனாக திரும்பினார். மனதின் தீ பிரளயமாக மாற மோரூர் ரத்தகாடானாது. பைரவ உக்கிரத்தோடு ருத்திர தாண்டவம் ஆடினார் சூர்யா காங்கேயன். மாமன்மார்களின் கோட்டை,கொடி,பண்ணை,வீடு,மடம்,கோவில் என அனைத்தயும் உடைத்து அழித்து சர்வ நிர்மூலமாக்கி கோர தாண்டவம் ஆடினார். பதறியும் சிதறியும் தங்களின் தவறை உணர்ந்து நாட்டை விட்டு வெளியேறினர். அவர்களில் சிலர் தங்களின் குல அடையாளத்தை துறப்பதாக வாக்களித்து பிறழாந்தை (ஆந்தையில் இருந்து பிரிந்தது, பொருள்தந்த என்று திரிந்தது) என்று பெயர்பெற்று மாறினர். இன்றும் ஆந்தை குலதினர் பொருள்தந்த குலதினர் பெண் கொள்வினை கொடுப்பினை கிடையாது (பங்காளிகள் என்பதால்). மோரூர் நாட்டை ஆண்ட சூர்யகாங்கேயன் பின்னாளில் தனது முன்னோரின் கன்னிவாடி ராஜ்ஜியத்தையும் மீட்டு அங்கு திரும்பினார். அவரின் வழிவந்தவர்கள் மோரூர் நாட்டின் ஆட்சி பொறுப்பை கவனித்து வந்தார்கள். முளசி நாடும் முளசி காங்கேயரும் பின்னாளில் கிளைத்தார்கள். மோரூர் காங்கேயர்கள் 34 தலைமுறைகளாக ஆட்சி செய்தனர். கொங்கு நாட்டின் மிக நீண்ட பட்டம் மோரூர் பட்டம்தான். திருசெங்கோட்டு மலை கோவிலுக்கு பெரும்பணிகள் செய்தார்கள். கொங்கு தேசத்தின் அனைத்து நாட்டாரும் (நிர்வாக பொறுப்பின் பெயர்) கொங்கு வேளாளர் மரபை தழுவி இருக்க சூர்யா காங்கேயர் திரும்பிய கன்னிவாடி கன்ன குலமும் கொங்கு வேளாளர் மரபை தழுவி இருக்க, மோரூர் முளசி பட்டங்கள் மட்டும் தங்களை நாட்டு கவுண்டர் என்று வேறுபடுத்தி காட்ட துவங்கினர். அவர்களுக்கு பெண் கொடுத்து பெண் எடுத்த ஏழூர் (செல்லன்) ராசிபுரம் (விழியன்) நாட்டாரும் இந்த பிரிவினையில் இணைந்தனர். இன்றும் இந்த பேதம் உள்ளது. கொங்கு வேளாளருக்கும் நாட்டு கவுண்டர்களும் கொள்வினை கொடுப்பினை கிடையாது. கொங்கு வேளாளரின் பிற நாட்டர்களுடனும் கிடையாது. பொப்பன்ன காங்கேயன் மோரூர் நாட்டின் கிளை நாடு முளசி நாடு. இதற்கும் கன்ன குல காங்கேயர் தான் பட்டகாரர்கள். முளசி காங்கேயர் இனிமையிலும் விருந்தோம்பலிளும் சிறந்தவர்கள். இந்த மரபில் வந்தவர் பொப்பண்ண காங்கேயர். தமிழ் இலக்கியங்களுக்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லாரை ஆதரித்து காத்தவர்.அடியார்க்கு நல்லார் தனது நூலில், “பொப்பண்ண காங்கேய கோன் இட்ட சோற்று கொழுப்பல்லவோ என்னை முத்தமிழுக்கும் உரை எழுத செய்வித்தது” என்கிறார். மதுரை அரசர்களோடு நெருங்கிய உறவை பேணி வந்தார்கள். மதுரையில் பஞ்சம் வந்த காலத்தில் பாண்டியன் தனது படையின் ஒரு பகுதியை முளசிக்கு அனுப்பினான். பின்னாளில் அதனை நினைவு கூர்ந்து பாண்டியன் மரியாதை செய்வித்தான். முத்துசாமி கவுண்டர் கன்ன குல தோன்றலான முத்துசாமி கவுண்டருக்கு மூன்று மனைவிகள். அவர் உயிர் நீத்த போது பதிவிரதைகள் மூவரும் உடன்கட்டை ஏறினர். அவர்கள் மூவரையும் ஓர் உருவாக வீரமாத்தி அம்மனாக கொங்கு மக்கள் வழிபடுகிறார்கள். தீப்பாய்ந்த அம்மன் என்று ராசிபுர வட்டார மக்கள் வணங்குவதும் இதே அம்மன்தான்.

No comments:

Post a Comment